

சென்னை: அண்மையில் மறைந்த கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரை நேரில் அழைத்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.27-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாட்டு பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் மாரடைப்பால் அக்.21-ம் தேதி இறந்தார். அதேபோல, மாநாட்டுக்குச் சென்றபோது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் கில்லி வி.எல்.சீனிவாசன், திருச்சி தெற்குமாவட்ட துணைத் தலைவர் ஜெ.கே.விஜய்கலை, நிர்வாகிகள் வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார், சார்லஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இவர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்த நிலையில், கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வரவழைத்து நேற்று விஜய் ஆறுதல் கூறினார். அவர்களிடம் கண் கலங்கி பேசிய விஜய், மகிழ்ச்சியாக உங்களைச் சந்திக்க விரும்பினேன். ஆனால் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது என வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர்களின் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்ப நிதி உதவியையும் விஜய் வழங்கியுள்ளார்.