

சென்னை: மதிமுகவை கிளை அளவில் இருந்து வலுப்படுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: நான் கொள்கைகளை காதலிக்கிறவன். லட்சியங்களுக்காக வாழ்பவன். நான் திமுகவில் 30 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அங்கிருந்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன். திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் முன்னிலையில் 1964-ம் ஆண்டு அங்கீகாரம் பெற்றேன். நான் செல்லாத கிராமங்கள் இல்லை.
ஏற்றி வைக்காத திமுக கொடிகள் இல்லை. இதையடுத்து திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மதிமுகவில் 30 ஆண்டுகள் என வாழ்வில் 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் கடந்து விட்டன. நான் உயிரினும் மேலாக கருதிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, என்னுடன் லட்சக் கணக்கான தொண்டர்கள் வந்தனர். இதில் 300 பொதுக்குழு உறுப்பினர்களும், 9 மாவட்டச் செயலாளர்களும் அடக்கம்.
அப்போது நடைபெற்ற முதல் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் சிலர் விலகினர். அவர்களை பற்றி வருந்தமாட்டேன். எனினும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான பாசம் மறையவில்லை. எந்த பதவியும் கேட்காமல் லட்சக் கணக்கான தொண்டர்கள் மதிமுகவில் இருக்கின்றனர். திமுகவுக்கு வரும் சோதனையை உடைத்தெறிய மதிமுக முதல் அணியாக வரும் என்ற உறுதியில் நாம் இருக்கிறோம். கட்சியில் இளைஞர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள். கொடி இல்லாத கொடிமரங்களில் கொடிகளை ஏற்றுங்கள். கட்சியை கிளை அளவில் இருந்து வலுப்படுத்துங்கள். காற்று திசைமாறி அடிக்கும். அப்போது அரசியலில் முக்கியமான இடத்துக்கு வருவோம். ஏனெனில் நம்மிடம் ஊழல், துரோகம், ஒழுக்கக் கேடு இல்லை. எனவே, மதிமுக இன்னும் வலுப்பெறும். இவ்வாறு வைகோ பேசினார்.