

சென்னை: மினி பேருந்துகளுக்கான புதிய விதிகளின்படி பேருந்து நிலையங்களுக்குள் மினி பேருந்து வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி, தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கிமீ பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கிமீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்க மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுமக்கள், மினி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் கடந்த ஜூலை 22-ம் தேதி கருத்துகளை கேட்டு தமிழக அரசிடம் போக்குவரத்துத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வெளிவரவுள்ள புதிய விதிகளில் பேருந்து நிலையங்களுக்குள் மினி பேருந்துகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கொடியரசன் கூறும்போது, “பேருந்து நிலையங்களின் வெளியே சாலைகள் ஓரமாக மினி பேருந்துகளை நிறுத்தி இயக்கும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சாலைகளை கடக்கும்போது, பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மினி பேருந்துகளை பேருந்து நிலையங்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்” என்றார்.