

புதுடெல்லி: உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் துவக்க ஏலம் கேட்க யாருமில்லை என மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை டி.ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கான பதிலில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று மக்களவையில் விழுப்புரம் எம்.பி.யான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ‘உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்கவும் உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அங்கு இருக்கும் விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? இதன் விமான ஓடுபாதையை உடான் திட்டத்தின் கீழ் இணைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா ?’ எனக் கேட்டிருந்தார்
இதற்கு விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “தமிழ்நாட்டில் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதை பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் உடான் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிராந்திய இணைப்புத் திட்டமானது தேவையின் அடிப்படையில் ஏலத்தின் அடிப்படையில் விமான நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் திட்டமாகும்.
உடான் திட்டத்தின் கீழ் இதுவரை ஐந்து முறை ஏலம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், உளுந்தூர்பேட்டை விமான ஓடு பாதையைப் பயன்படுத்தி அங்கு விமான நிலையம் அமைப்பதற்காக யாரும் ஏலம் கேட்கவில்லை. அதனால், அங்கு விமான நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதில் மீதான கருத்தாக எம்.பி டி.ரவிகுமார் கூறுகையில், “மத்திய அரசிடம் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பலமுறை இதுகுறித்து வலியுறுத்தி விட்டேன். உளுந்தூர்பேட்டை விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிகிறது. எனவே, மத்திய அரசின் வசம் உள்ள அந்த இடத்தை மாநில அரசு குத்தகைக்குப் பெற்று அங்கு விமான பயிற்சி நிலையமோ, ட்ரோன் உற்பத்தித் தொழிற்சாலையோ, திறந்த வெளி தானியக் கிடங்குகளோ, குளிர்பதனக் கிடங்குகளோ, தொழிற்சாலையோ அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அரசு பயன்படுத்தாத விமான நிலையத்திற்கான அந்த இடம் பலராலும் ஆக்கிரமிக்கப்படுவதோடு, ஓடுபாதையும் சேதமாகிக் கொண்டிருப்பதாகிக்கொண்டிருக்கிறது” என்றார்.