

கருணாநிதியே மறுத்துச் சொல்லத் தயங்கும் அளவுக்கு திமுகவின் பவர்ஃபுல் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் சேலம் வீரபாண்டி ஆறுமுகம். பொதுக்குழுவில் வீரபாண்டியார் பேச எழுந்தால் அதுதான் மாலைப் பத்திரிகைகளில் தலைப்பாகும். 1993-ல் வைகோ பிரச்சினை எழுந்த போது அவருக்காக மதுரை விராட்டிபத்து பொதுக்குழுவில் தரையில் அமர்ந்து நியாயம் கேட்டவர் வீரபாண்டியார்.
இத்தனை இருந்தாலும் சேலத்தை திமுக கோட்டையாக வைத்திருந்ததால் அவரை கருணாநிதியாலேயே எதுவும் செய்யமுடியவில்லை. சேலம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நேரடியாக தலையிட சக திமுக அமைச்சர்களே தயங்கிய காலங்களும் உண்டு.
இப்படியெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்த வீரபாண்டியார் 2012 நவம்பர் 23-ல் காலமானார். அதுவரைக்குமே அவர் சேலம் மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு சேலம் திமுகவே செயலிழந்து போனது என்பார்கள். அண்மையில் அவரது நினைவு நாள் கூட அப்படித்தான் அரவமின்றி கடந்து போயிருக்கிறது.
1962-ல் தொடங்கி 6 முறை எம்எல்ஏ-வாக இருந்த வீரபாண்டியார், 3 முறை வேளாண் துறைக்கு அமைச்சராக இருந்திருக்கிறார். தனது காலத்திலேயே தனது மகன் வீரபாண்டி ராஜாவுக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் சீட் கேட்டார் வீரபாண்டியார். அப்போது, “இம்முறை குடும்பத்தில் ஒருவருக்குத்தான் சீட்” என தலைமையிலிருந்து தகவல் சொல்லப்பட்டது. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல், “அப்படியானால் இம்முறை தலைவர் நிற்கப்போவதில்லையா?” என்று வீரபாண்டியார் கேட்டதாகச் சொல்வார்கள்.
இப்படியெல்லாம் தலைமையையே மிரளவைத்த வீரபாண்டியாரின் வாரிசுகள் இன்று அரசியல் முத்திரை இல்லாமல் இருக்கிறார்கள். வீரபாண்டியார் இருந்தவரை கட்சிக்குள் இருந்த இடம் தெரியாமல் இருந்தவர்கள் எல்லாம் இப்போது அவரது படத்தைப் போட்டு போஸ்டர் அடிக்கக்கூட யோசிக்கிறார்கள். மீண்டும் அந்தக் குடும்பம் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் அத்தனை கவனம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட திமுகவினர் சிலர், “வீரபாண்டியார் மறைவுக்குப் பின் அவரின் 2-வது மகன் வீரபாண்டி ராஜா சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார். ஆனால், அவர் 2021-ல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். தற்போது வீரபாண்டியாரின் மூன்றாவது மகன் பிரபு கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். இவர் உதயநிதிக்கும், அன்பில் மகேஸுக்கும் விசுவாசமாக இருக்கிறார்.
வீரபாண்டியாரின் மூத்த மகன் வீரபாண்டி செழியன். இவரது மருமகன் மருத்துவர் தருண் திமுக ஐடி விங்கில் மாநில பொறுப்பில் உள்ளார். 2021-ல் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இம்முறை இவரும் வீரபாண்டி பிரபுவும் சேலம் மேற்கு தொகுதியை குறி வைத்து காய்நகர்த்தி வருகிறார்கள்.
வீரபாண்டி ராஜாவின் மகள் மலர்விழி பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். அரசியலில் அத்தனை தீவிரம் காட்டாத இவர், விஎஸ்ஏ கல்லூரி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். ஒரு காலத்தில், சேலத்தைப் பொறுத்தவரை யாருக்கு சீட் தரவேண்டும், தரக்கூடாது என்பதை வீரபாண்டியார் தான் முடிவு செய்வார். ஆனால், இப்போது அவரது வாரிசுகள் அடுத்தவர் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்” என்றார்கள்.