

தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடைமுறைபடுத்த வலியுறுத்தி பிரதமருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
விஜயகாந்த் எழுதியுள்ள கடிதத்தில்: "நமது நாட்டின் வட மாநிலங்களில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக மக்கள் உயிர் இழந்ததோடு பெருவாரியான மக்கள் தங்கள் உடமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து வாடுகின்றனர்.
மறுபுறம் பல மாநிலங்களில் மழையளவு குறைவின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது.இதனால் குடிநீர் பற்றாக்குறை,விவசாயம் பாதிப்பு என பலவகை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது கடும் மழையினால் நமது நாட்டில் ஒருபுறம் அழிவு, மறுபுறம் வறட்சி என்ற இரு பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தேசிய நதிகள் இணைப்பு திட்டம்தான் என்பது தாங்கள் அறிந்ததே.
வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்தி பொது மக்களின் போக்குவரத்தை மேம்படுத்தி தொழில் துறையை சிறப்பானதாக்கியது போல தங்களின் தலைமையில் உள்ள இந்த ஆட்சியில் இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வேகமாக நடைமுறைப்படுத்தி மக்களின் துயர் துடைக்க வேண்டுமென்று தேமுதிக சார்பில் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இத்திட்டத்தை நிறைவேற்ற தங்களுக்கு தேமுதிக முழு ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.