புயல் சின்னம்: தமிழக துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது | படங்கள்: எல்.பாலச்சந்தர்
புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது | படங்கள்: எல்.பாலச்சந்தர்
Updated on
2 min read

ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெறக் கூடும் எனவும், இது வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும், என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு சுமார் 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்பகுதியில் கடல் சீற்றதால் சேதமடைந்த சாலை
ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்பகுதியில் கடல் சீற்றதால் சேதமடைந்த சாலை

இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 55-லிருந்து அதிகப்பட்சம் 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும வீசக்கூடும் என்பதால் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் துறைமுகம் உள்பட தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டிணம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் சேராங்காடு, பாம்பன் தெற்குவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மீனவர்களின் குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

பாம்பன் கடற்பகுதி கடல் சீற்றம்
பாம்பன் கடற்பகுதி கடல் சீற்றம்

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல மூன்றாவது நாளாக அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மீன்பிடித் துறைமுகங்களின் ஆழமற்ற பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

பாம்பன் வடக்கு பாக்ஜலசந்தி கடற்பகுதியின் கடல் சீற்றம்
பாம்பன் வடக்கு பாக்ஜலசந்தி கடற்பகுதியின் கடல் சீற்றம்

புயல் மற்றும் கனமழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகம் சார்பாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாசிக்க > புயல் சின்னம்: தமிழக துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in