

புதுச்சேரி: புதுச்சேரியில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரை, நகரப் பகுதிகளில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். கடற்கரை மணலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் புயலால் புதுவையில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று இரவு முழுவதும் விடிய விடிய அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இன்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க துவங்கியுள்ளது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
புதுவையில் கடல் 3-வது நாளாக சீற்றத்துடன் காணப்படுகிறது. பாதுகாப்பு கருதி கடற்கரையில் இருந்து இறங்கி மணல் பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீஸார் தடைவித்துள்ளனர். கடற்கரை சாலையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 7.2 செமீ மழை பதிவாகியுள்து. காரைக்காலில் 9.6 செமீ மழை பதிவாகியுள்ளது.
முதல்வர் ரங்கசாமி இன்று காலை நகர பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடற்கரை சாலைக்கு சென்ற அவர் கடற்கரையில் மக்களை இறங்காமல் பார்த்துக்கொள்ள காவல் துறைக்கு அறிவுறுத்தினார். கடற்கரையில் உள்ள பழைய சாராய ஆலை வளாகத்தில் உள்ள பல்நோக்கு கூடத்தை தற்காலிக ஆளுநர் மாளிகை கட்டப்படும் பணியையும் முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிகளுக்கு நாளை விடுமுறை தொடர்பாக கல்வியமைச்சர் அறிவிப்பார் என்று முதல்வர் குறிப்பிட்டார்.