வடசென்னை அனல் மின்​நிலைய நிலை 3-ல் மின் உற்பத்தியை தொடங்க அமைச்சர் உத்தரவு

வடசென்னை அனல் மின்​நிலைய நிலை 3-ல் மின் உற்பத்தியை தொடங்க அமைச்சர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தலா 210 மெகாவாட் திறனில் 3 அலகுகளுடன் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் தலா, 600 மெகாவாட் திறனில் 2 அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையமும் உள்ளது.

இதன் அருகில், 'வடசென்னை - 3' என்ற பெயரில், 800 மெகா வாட் திறனில் அனல் மின்நிலையம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் மின்வாரியம் தொடங்கியது. கட்டுமானப் பணிகளை, மத்திய அரசின் பிஎச்இஎல் நிறுவனமும், 'பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர்' போன்றவற்றை நிறுவும் முக்கிய பணிகளையும், இதர கட்டுமான பணிகளையும் தனியார் நிறுவனமும் மேற்கொண்டன.

இதன்படி ரூ.6,376 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட 800 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் நிலை 3-ஐ தமிழக முதல்வர் கடந்த மார்ச் 7-ம் தேதி அன்று தொடங்கி வைத்தார். இந்த மின்நிலையத்தில் தற்போது சோதனை இயக்கத்துக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் குறித்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொருளாதார ரீதியான மின்உற்பத்தி பணிகளை துரிதமாக முடித்து, வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் க.நந்தகுமார், இயக்குநர் (திட்டம்) கருக்குவேல் ராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in