

தமிழ் வளர்ச்சிக் கழக ஆட்சிக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், செயலாளராக சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் பொதுக்குழு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்தது. தமிழ் வளர்ச்சிக்கழக தலைவர் ம.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் புதிய ஆட்சிக்குழு நிர்வாகிககள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக ம.ராஜேந்திரன், துணைத்தலைவராக கிருஷ்ண சந்த் சோடியா, துணைத்தலைவர் மற்றும் பொருளாளராக வ.ஜெயதேவன், செயலாளர்களாக உலகநாயகி பழனி, பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், பதிப்பாசிரியராக பெ.அர்த்தநாரீசுவரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர், தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் உட்பட 9 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் பேராசிரியை சவுந்தரவள்ளி குழந்தைசாமி உட்பட 15 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ம.ராஜேந்திரன், கிருஷ்ண சந்த்த சோடியா, பேராசிரியர் வ.ஜெயதேவன், முஸ்தபா, நல்லி குப்புசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் சாரதா நம்பியாரூரன், நாகலட்சுமி குமாரசாமி ஆகியோர் நியமிக்கப்படுவதாக தலைவர் ராஜேந்திரன் அறிவித்தார். நிறைவாக, பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் நன்றி கூறினார்.