காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர் பணிநியமனம் குறித்து ஆலோசனை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர் பணிநியமனம் குறித்து ஆலோசனை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கான பணிநியமனம் தொடர்பான அதிகாரிகள் அளவிலான கூட்டம் நாளை (நவ.28) நடைபெறவுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான அருள்ஜோதி உட்பட 83 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: அரசு கால்நடை மருத்துவமனைகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உதவி கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமனம் மேற்கொள்ளவில்லை. இதனால் காலிப்பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்கள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தரம் கோர இயலாது என்றும், இருப்பினும் எதிர்காலத்தில் நடைபெறும் கால்நடை மருத்துவர்களுக்கான பணிநியமனத்தில் ஆண்டுக்கு 5 மதிப்பெண் வீதம் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கலாம் என்றும், வயது வரம்பில் தளர்வு அளித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையி்ல் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 731 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்றும் நாங்கள் அனைவரும் விகிதாச்சார அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 187 தற்காலிக மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். தகுதியற்ற 57 மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 187 மருத்துவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள எங்களுக்கு இன்னும் பணிநியமனம் வழங்கப்படவில்லை. எனவே சட்டவிரோதமாக பணியாற்றி வரும் 187 தற்காலிக மருத்துவர்களை பணிநீக்கம் செய்துவிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மனுதாரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகள் அளவிலான கூட்டம் வரும் நவ.28 ( நாளை ) நடைபெறவுள்ளது. அதில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த கூட்டத்தி்ல் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை வரும் டிச.12-க்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in