

தருமபுரி: வாக்கரூ - ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் தருமபுரியில் நேற்று நடைபெற்ற ‘நற்சிந்தனை நன்னடை’ நிகழ்வில், வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக நற்சிந்தனை அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கூறினார்.
பள்ளிப் பருவத்திலேயே சமுதாயத்துக்குப் பயனளிக்கும் நற்செயல்களைச் செய்துவரும் மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் வாக்கரூ - ‘இந்து தமிழ் திசை’ இணைந்து ‘நற்சிந்தனை நன்னடை’ எனும் நிகழ்வை நடத்தி வருகிறது. கோவை, திருச்சி, சென்னை மண்டலங்களில் நற்செயல்களில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளைப் பாராட்டும் நிகழ்வு தருமபுரி ரோட்டரி அரங்கில் நேற்று நடைபெற்றது. தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி, மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பள்ளிகளுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கி அவர் பேசியதாவது: நற்சிந்தனை கொண்ட மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், வாக்கரூ நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி வரவேற்புக்குரியது. மொத்தம் 19 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 27 பள்ளிகளைச் சேர்ந்த 88 மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்குவதைப் பாராட்டுகிறேன்.
இது குழந்தைகளின் நற்சிந்தனைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாகும். மரக்கன்றுகள் வளர்த்தல், பறவைகளுக்கு இரைவைத்தல் உள்ளிட்ட, கல்விக்கு அப்பாற்பட்ட அறம் சார்ந்த செயல்களில் ஈடுபடும் குழந்தைகளைப் பாராட்டும் விழா இது. விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவக்கூட மனமில்லாமல், அதைக் கடந்து போகிறோம். நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் குறைந்து கொண்டே வருகின்றன. ஒருவர் வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக, நற்சிந்தனை மிகவும் அவசியமாகும். நற்சிந்தனை கொண்ட மாணவர்கள் நிறைய பேர் உருவாக வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
ஆயுர்வேதம் மற்றும் விளையாட்டு இயக்கவியல் நிபுணர் மருத்துவர் தர்மேஷ் குபேந்திரன் பேசும்போது, “குழந்தைகள் உட்கார்ந்த இடத்திலேயே இருப்பதால், சிறுவயதிலேயே உடல்நலம் பாதிக்கப்படுகிறது. நிமிர்ந்த நெஞ்சோடும், நேர்கொண்ட பார்வையோடும் நடக்கும்போதுதான் கம்பீரமாக இருக்கும். இளைய தலைமுறை குழந்தைகளிடம் நற்சிந்தனைகளை வளர்ப்பதற்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், வாக்கரூ நிறுவனமும் எடுத்துள்ள இந்த முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது” என்றார்.
வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவன மேலாண் இயக்குநர் என்.நெளஷத் பேசும்போது, “நடை என்பது மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அதேபோல, நன்னடை நல்ல மனிதர்களுக்கு முக்கியம். சமூகத்தில் நன்னடை மிக்கவர்களை உருவாக்கும் சமூக அக்கறை கொண்ட இந்நிகழ்ச்சியை வாக்கரூ நிறுவனமும் இணைந்து நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது” என்றார்.
நிகழ்ச்சியில், வாக்கரூ நிறுவன வர்த்தக இயக்குநர் ராஜேஷ் மாத்யூ குரியன், சப்ளை செயின் மேனேஜர் தேசிகன் நாராயண், ‘இந்து தமிழ் திசை’ சென்னை மண்டல விளம்பரப் பிரிவு பொது மேலாளர் சிவக்குமார் கலந்துகொண்டனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.