புயல் சின்னம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரைகளில் படகுகள் நிறுத்தம்
ராமேசுவரம்: வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் படகுகளை கரையில் நிறுத்தியுள்ளனர்.
வங்கக் கடலின் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய ஃபெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், செவ்வாய்கிமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இலங்கையில் உள்ள திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு - தென் கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென் கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென் கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதன்கிழமை (நவ.27) ஃபெங்கால் புயலாக வலுபெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் அதிகப்பட்சமாக 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கனும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர், தேவிப்பட்டிணம், தொண்டி, எஸ்.பி. பட்டிணம் ஆகிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டுப் படகு மீனவர்கள் தங்களின் படகுகளை கரையில் ஏற்றி நிறுத்தி வைத்துள்ளனர். விசைப்படகு மீனவர்கள் ஆழமற்ற பகுதிகளில் தங்களின் படகுகளை நங்கூரமிட்டுள்ளனர்.
மேலும், செவ்வாய்கிழமை காலை 6 மணியிலிருந்து மாலை 4 மணி வரையிலுமான மழையளவு விவரம் வருமாறு, அதிகப்பட்சமாக பாம்பன் 19.30 மி.மீ, தங்கச்சிமடம் 17.00 மி.மீ, ராமேசுவரம் 10.20 மி.மீ மழையும் பதிவாகின.
