

சென்னை: தேசிய செயல் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் போதைப் பொருள், மதுபானத்தின் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒப்பந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘போதை இல்லா தமிழகம்’ என்பதை எட்டும் வகையில், தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நிதியை பெறும் வகையில், போதை தேவையை குறைத்தல் தொடர்பான தேசிய செயல் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் போதைப் பொருள், மதுபானத்தின் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்த தமிழக குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள், மதுபானத்தின் பயன்பாட்டை அறிவது, வாடிக்கையாளர்களால் அவை எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது, அவற்றை பயன்படுத்தும் நுகர்வோரின் சமூக பொருளாதார அடையாளம், பின்னணியை அறிவது, இவற்றின் நுகர்வு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிவது, இதன் பயன்பாட்டை தடுப்பதற்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகள், திட்டங்களை வகுப்பது ஆகியவை இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.
இந்த ஆய்வில் கலவையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் வசிக்கும் 18-25 வயதுக்கு உட்பட்ட போதைப் பொருள், மதுபானம் பயன்படுத்தும் நுகர்வோரிடம் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த ஆய்வை நடத்த தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.