

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்கக் கோரி, தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் பேத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா(43). பி.காம் பட்டதாரியான இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52) மாவு மில் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.
வாடகை வீட்டில் வசித்துவரும் லலிதா, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருக்க வீடு வழங்க வேண்டும் என மனு அளித்தார்.
இதுகுறித்து லலிதா கூறும்போது, ‘‘எனது கணவர் மாவு மில்லில் வேலை செய்து வருகிறார். 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது வாடகை கொடுக்க வருமானம் இல்லாத காரணத்தால், எங்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இலவசமாக வீடு வழங்க வேண்டும். மேலும், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து ஓராண்டாக காத்திருக்கிறேன். எனவே, எனது மனுவை ஆய்வு செய்து, வீடு மற்றும் மகளிர் உரிமைத் தொகையை வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.