

சென்னை: “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொருத்தவரை, கடலின் வெப்பநிலை, கீழ்ப்பகுதியில் உள்ள காற்று, மேல்பகுதியில் காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும். எனவே, தற்போது நிலவும் இந்த நிலை தொடரும்போது, அடுத்த வரும் 5 தினங்களுக்கு குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது,” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (நவ.25) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காலை நிலவரப்படி, நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 880 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 4 தினங்களுக்கு வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்துவரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரையில், டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரத்திலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவ.26ம் தேதி, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கும், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
நவ.27ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 28ம் தேதி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நவ.29ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடற்கரைப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்துவரும் 5 தினங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரையில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்.1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் பதிவான மழையின் அளவு 327 மி.மீட்டர். இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 331 மி.மீட்டர். இயல்பை ஒட்டி மழை பதிவாகியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொருத்தவரை, கடலின் வெப்பநிலை, கீழ்ப்பகுதியில் உள்ள காற்று, மேல்பகுதியில் காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும். இதனால் புயல்கள் ஒவ்வொன்று மாறுபட்ட தன்மைக் கொண்டவை. எனவே, வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே, தற்போது நிலவும் இந்த நிலை தொடரும்போது, அடுத்த வரும் 5 தினங்களுக்கு குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.