

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகேயுள்ள மல்லிப் பட்டினம் மீன்பிடி துறைமுகம் சுற்றுப் பகுதியில், திங்கள்கிழமை இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் படகுகள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் சுற்றுப் பகுதியில் திங்கள்கிழமை நண்பகலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு என்ற முருகானந்தம் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து ஒரு பிரிவினர் அதிகம் வசிக்கும் மல்லிப் பட்டினத்துக்குள் நுழைந்தபோது, அங்கு வந்த சில இளைஞர்கள், பாஜகவினரை தடுத்து தங்கள் ஊருக்குள் வாக்கு கேட்டு வரக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனராம். ஆனால், பாஜகவினர் அதைப் பொருட்படுத்தாமல் ஊருக்குள் செல்ல முயன்றனராம்.
இதையடுத்து, வாய்த் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அதில், பாஜக வேட்பாளரின் கார் கண்ணாடி உடைந்து, வேட்பாளரின் மார்பில் கல்லடிபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இரு தரப்பிலும் பலருக்கு மண்டை உடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, அங்கு கூடிய பாஜகவினர் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் வாகனங்களைத் தாக்கினராம். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனிடையே, அந்தப் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த படகுகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சாவூர் கு.தர்மராஜன், திருவாரூர் காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் அதிரடிப் படையினர் குவிக்கப் பட்டு, கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.