

தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி கரன்சி கட்டுகளை அள்ளிக் கொண்டிருந்த நேரத்தில் புதுச்சேரியில், பாஜக மற்றும் அதன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சிலர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை அழைத்து வந்து விழா எடுத்திருக்கிறார்கள். இங்கு மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா விசிக-வில் இருந்து கொண்டு அதிரடி கிளப்பி வரும் நிலையில் புதுச்சேரியில் மார்ட்டின் மகன் களமிறங்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை யாரையும், இவர் இந்தக் கட்சிதான் என அக்மார்க் முத்திரை குத்திவிட முடியாது. ஏனென்றால், போகிற போக்கில் காருக்குள்ளேயே கரைவேட்டியை மாற்றிக் கொண்டு கட்சி மாறுவது புதுச்சேரி அரசியல் வாதிகளுக்கு பழகிப்போன சமாச்சாரம்.
இப்படித்தான் கடந்த முறை காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜான்குமாரும் அவரது புதல்வர் ரிச்சர்டும் பாஜகவுக்கு தாவி அங்கும் எம்எல்ஏ ஆனார்கள். முன்பு, நாராயணசாமி முதல்வராவதற்காக தனது எம்எல்ஏ பதவியை தியாகம் செய்த ஜான்குமார், பிற்பாடு கட்சி மாறி அதே நாராயணசாமி பதவி இழக்கவும் காரணமானவர்.
ஜான்குமார் தனது தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் பற்றிய டேட்டாவை அப்டேட்டாக வைத்திருப்பார். இதற்காகவே தனி அலுவலகத்தை திறந்து வைத்திருப்பவர், அடிக்கடி தொகுதி மக்களுக்கு பரிசுகளையும் வாரி வழங்கி குஷிப்படுத்துவார். இப்போது நெல்லித்தோப்பில் ரிச்சர்ட்டும், காமராஜர் நகரில் ஜான்குமாரும் எம்எல்ஏ-க்களாக உள்ளனர்.
இந்த நிலையில், தனது தொகுதியில் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை வைத்து நடத்தி இருக்கிறார் ஜான்குமார். தமிழகத்தில் மார்ட்டினுக்கு எதிரான அமலாக்கத்துறை ‘அட்டாக்’ நடந்துகொண்டிருந்த போது இந்த நிகழ்வு நடந்திருப்பது தான் ஹைலைட்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்எல்ஏ-வானரிச்சர்ட், “எனது தந்தையை விட ஒரு படி மேலாக சார்லஸ் வந்துள்ளார். என் தந்தை செய்ததை விட பல மடங்கு இத்தொகுதிக்காக அவர் செய்வார். விரைவிலேயே மிக முக்கியமான பொறுப்புக்கு அவர் வரவுள்ளார்” என்றார்.
புதுச்சேரி அரசியலில் அடியெடுத்து வைக்கிறீர்களா? என சார்லஸ் மார்ட்டினிடம் கேட்டதற்கு, “புதுச்சேரிக்கு விழாவுக்காக வந்தேன். அரசியல் பற்றிய கேள்விக்கு இப்போது பதில் இல்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்” என்றார். ஏற்கெனவே ஜான்குமார் லாட்டரி தொழிலில் இருந்தவர். லாட்டரி மார்ட்டினுடன் அப்போது அவருக்கு நல்ல பழக்கம்.
அந்த பழையபாசத்தில் தற்போது மார்ட்டின் மகனுடனும் கைகோத்துள்ளார் என்கின்றனர். அதுசரி, பாஜக எம்எல்ஏ-க்கள் இவ்வளவு வெளிப்படையாக மார்ட்டின் வாரிசை அழைத்து வந்து விழா நடத்த என்ன காரணம் என பாஜக வட்டாரத்தில் விசாரித்தால், “புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் 6 பேரில் ஒருவர் பேரவைத்தலைவராகவும் 2 பேர் அமைச்சர்களாகவும் உள்ளனர். ஜான்குமார் தனக்கும் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கினார்; கிடைக்கவில்லை.
இன்னொரு பக்கம் பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சைகள் வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டு தலைமையை நெருக்கினர். அதுவும் கிடைக்காததால் அவர்களுக்கும் அதிருப்தி. இந்த நிலையில், 2026 பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாட்டை மறைமுகமாக உணர்த்தவே இந்த விழாவை நடத்தி இருக்கிறார்கள். கட்சித் தலைமை என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்” என்கின்றனர். மார்ட்டின் மகனை வைத்து பாஜக எம்எல்ஏ-க்கள் விழா நடத்தி இருப்பது பாஜக மேலிடத்தையும் சற்று யோசிக்கத்தான் வைத்துள்ளது!