அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறனை 12 சதவீதம் உயர்த்த திட்டம்

அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறனை 12 சதவீதம் உயர்த்த திட்டம்

Published on

இந்த நிதியாண்டுக்குள் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி திறனை 12 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்வாரியத்துக்கு வடசென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சராசரி மின்னுற்பத்தி திறன் 67.14 சதவீதமாக உள்ளது. இதை 85 சதவீதமாக உயர்த்த மத்திய மின் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த உற்பத்தி திறன் இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, மத்திய அரசு நிலக்கரியை தடையின்றி வழங்க வேண்டும்.

மேலும், மின்னுற்பத்தி நிலையங்களில் பாய்லர் டியூப் பழுது ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது. இவ்வாறு பழுது ஏற்பட்டால் அதை சரி செய்து மீண்டும் மின்னுற்பத்தியை தொடங்க 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகிறது. அத்துடன், அனல்மின் நிலையங்களின் மின்னுற்பத்தி செலவை ஒப்பிடுகையில், காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் மின்னுற்பத்தி செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.3-க்கும் குறைவாகவே செலவாகிறது. சூரியசக்தி மூலம் ஆண்டுதோறும் மின்னுற்பத்தி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால், அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்னுற்பத்தியை மட்டும் நம்பி இருக்க முடியாது. எனவே, அனல்மின் நிலையங்களின் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டி உள்ளது. அதன்படி, இந்த நிதியாண்டுக்குள் 12 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in