

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், "மாநகர போக்குவரத்து கழகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சில மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான யுடிஐடி அட்டை கொடுக்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் போக்குவரத்து படியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 72-ல், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் டிச.3-ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் உள்ளபடி மாநகர போக்குவரத்து கழகத்தில் மாற்றுதிறனாளிக்கான யுடிஐடி அட்டை மூலம் போக்குவரத்து படி பெறக்கூடிய ஒவ்வொருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.