

சென்னை: திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடவடிக்கையை தொடங்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக ரூ.5 கோடியே 53 லட்சம் அளவுக்கு சொத்துகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில், ஆ.ராசா, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் 2 நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.
எனவே, இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரை குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் தொடங்கக் கூடாது" என மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.