

இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்க்கூடல்-2024 என்ற மாநாடு பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது. பேரவைத் தலைவர் செ.துரைசாமி வரவேற்றார். துணைவேந்தர் (பொறுப்பு) க.சங்கர் தலைமை வகித்தார். மாநாட்டின் நோக்கம் குறித்து பேரவைப் பொதுச் செயலாளர் மு.முத்துராமன் பேசினார்.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூர் எம்.பி. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநாட்டைத் தொடங்கிவைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்கின்றனர். இது பெரும் கவலையைத் தருகிறது. தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் சான்றோர் நினைத்தால் இதை மாற்ற முடியும். தாய்மொழி என வரும்போது பலரும் அதைப் பொது சொத்து எனக் கருதுகின்றனர்.
தாய்மொழிக்காக போராடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. தமிழும், தமிழரும் பெருமிதம் கொள்ளும் ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாடு இன்று (நவ.24) நிறைவடைகிறது.
சோழர் அருங்காட்சியகம்: பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வருங்காலங்களில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியம் அமைப்பதற்கான மாதிரி படங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி, விரைவில் பணிகள் தொடங்கப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடை நீக்கம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து கருத்து கூறக் கூடாது. குழுவின் விசாரணை முடிந்த பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.