

கும்பகோணம்: “சட்டப்பேரவைத் தேர்தலை கடவுள் பார்த்துக்கொள்வார். யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிப்பது கடவுள்தான்” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பலில் உள்ள அஷ்ட பைரவர் கோயிலான சொர்ணா கர்ஷண பைரவர் கோயிலில், மகா கால பைரவ அஷ்டமி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வழிபாட்டுக்கு வந்ததால் அரசியல் வேண்டாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கடவுள் பார்த்துக்கொள்வார். யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிப்பது கடவுள்தான்.
நான் எனது அண்ணன், தம்பி உள்பட அனைவருக்காக வேண்டிக்கொள்ள வந்தேன். ஆன்மிக நம்பிக்கை இன்னும் அதிகமாக வேண்டும். ஆனால், இப்போது குறைந்து கொண்டே வருகிறது. அதனை அதிகப்படுத்த வேண்டும். எங்களுக்கு படிப்பறிவு இல்லை. இறை அறிவினால் வாழ்ந்து வருகிறோம். மனிதர்களையும், பெரியவர்களையும் நம்பி பிரயோஜனம் இல்லை. நம்மை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, அவருடன் திருவாரூர் குரு சிவாஜி சந்தோஷ் சுவாமிகள் உடனிருந்தார். இதேபோல் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.