Published : 23 Aug 2014 06:28 PM
Last Updated : 23 Aug 2014 06:28 PM

மதுவிலக்கை உடனே அமல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் மதுவினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டதால், மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 63–வது பிறந்தநாள் விழா வருகின்ற 25–ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள 1000 குடும்பங்களை தேர்வு செய்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்சி சார்பில் தலா ரூ.10,000 வீதம் ரூ.1 கோடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தனது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினம்' ஆக கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, சென்னை - கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 குடும்பத்துக்கு நலத்திட்ட உதவியாக தலா ரூ.10 ஆயிரத்தை விஜயகாந்த் இன்று வழங்கினார்.

மேலும், ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கோளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்தை அதன் நிர்வாகியிடம் விஜயகாந்த் வழங்கினார். சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊனமுற்றோர் 10 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்தையும் வழங்கினார்.

தனது பிறந்தநாள் விழாவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் பெரும்பாலானவை அறிவிப்புகளாகவே உள்ளன. செயல்படுத்துகின்ற ஒரு சில திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தபடவில்லை. கவர்ச்சி திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை. இதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் நிர்வாக திறமை இல்லாததே ஆகும்.

தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் மதுவினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டனர். இதனால் பெண்களும், குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவே மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மக்களின் நலனை பற்றி கவலைப்படாத அரசாங்கம், கடும் வறட்சியின் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் பாதிப்பு, தொழிற்சாலைகள் முடங்கியதால் தொழிற்துறை மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, மீண்டும் மின்தடையால் தென் தமிழகமே பாதிப்பு, வேலை வாய்ப்பின்றி சுமார் ஒரு கோடி பேர் பதிவுசெய்து காத்திருக்கும் அவலநிலை, கொலை மற்றும் கொள்ளையால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, இவற்றிற்கும் மேலாக விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர்.

மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களாக இவர்களை இதற்காகவா தேர்வு செய்தனர். தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவதாகவும், மக்கள் மகிழ்சியோடு இருப்பதாகவும் சொல்லி,பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றி கொண்டுள்ளனர்.

எனவே இனிவரும் காலங்களிலாவது தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுபவர்கள் யார் என்பதை பற்றி சிந்தித்து, தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். ஆட்சிகள்தான் மாறுகிறது, ஆனால் காட்சிகள் மாறவில்லை. லஞ்சம் ஊழல் இல்லாத மக்கள் ஆட்சி மலர்ந்திட வேண்டும். இன்றைய மக்களின் காட்சிகள் மாறிடவேண்டும். உண்மையான ஜனநாயகம் வென்றிட இந்த "வறுமை ஒழிப்பு தினத்தில்" நாம் அனைவரும் உறுதி ஏற்போம்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x