

உடுமலை: தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று கூட்டுறவுத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கூட்டுறவு வணிக வளாகம், பெட்ரோல் பங்க் ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ஏற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியது: "தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கான கரோனா காலகட்ட நிதி உதவி, மழை வெள்ள பாதிப்பின்போது வழங்கப்பட்ட நிவாரண பொருள்கள் கூட்டுறவு துறை மூலமே விநியோகிக்கப்பட்டது.
இத்துறை ஏழை, எளிய மக்களின் ஒளி விளக்காக திகழ்கிறது. நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல வங்கி சார் நடவடிக்கைகள் மூலம் ரூ.86,000 கோடி வரவு செலவு நடைபெற்றுள்ளது. விரைவில் ரூ.1 லட்சம் கோடியாக மாறும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வேர்கள், விழுதுகள், சிறகுகள் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உடுமலை நகர கூட்டுறவு பண்டகத்துக்கு சொந்தமான ரூ.3.79 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில் இந்தியன் ஆயில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் ஆகியவற்றை கூட்டுறவுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி: உடுமலையில் நகர கூட்டுறவு பண்டகம் சார்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், மின் இணைப்பு உள்ளிட்ட ஒரு சில அத்யாவசிய பணிகள் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. கட்டுமானப் பணிகள் முடிந்தும் முதல்வரின் இசைவு வேண்டி பல நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தது. அதுகுறித்த படத்துடன் கூடிய செய்தி 2024 நவ.5ம் தேதி ’இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது.
அன்றைய தினம் கோவையில் ஆய்வு பணியில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து துறை சார்ந்த உயரதிகாரிகள் அனுமதி, மின் இணைப்பு என அனைத்து பணிகளும் 15 நாட்களில் நிறைவேற்றப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.