

மதுரை: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் பார் கவுன்சில் தயாரித்துள்ள வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார். ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். தேனியில் வழக்கறிஞர் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மறியல் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கான பரிந்துரையை கடந்த ஜூலை 2-ல் இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதாவை அகில இந்திய பார் கவுன்சில் நியமித்த ஏழு பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது.இந்த வரைவு மசோதாவில் வழக்கறிஞர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் கைது செய்யக்கூடாது, வழக்கறிஞர்களைத் தாக்கும் நபர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும், அதே நபர் மீது ஒரே பிரிவின் கீழ் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு மீண்டும் பதிவானால் அதிகபட்சமாக 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும்.
வழக்கறிஞர்களை தாக்குபவர்களுக்கு சிறைத் தண்டனையுடன், ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை அபராதம் விதிக்கவும், மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் வழக்கறிஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.தலைமை நீதித்துறை நடுவரின் நேரடிக் கண்காணிப்பு இல்லாமல், காவல்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்களைக் கைது செய்ய முடியாது. வழக்கறிஞர்களின் மீதான புகாரை டி.எஸ்.பி அந்தஸ்துக்கு குறைந்த காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவை சட்டமாக்கி வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் கூறுகையில், “வழக்கறிஞர் பாதுகாப்பு மசோதாவை மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்தாமல் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் சட்டமாக்கி உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் வழக்கறிஞர்களை பணிசெய்ய விடாமல் தடுப்பது, வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல், கடத்தல், அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதேபோல் வெளி மாநில சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்வதை பார் கவுன்சில் ஒழுங்குபடுத்த வேண்டும்,” என்றார்.