கோவை - உக்கடத்தில் 2 இடங்களில் அமைகிறது பேருந்து நிலையம்!
கோவை: உக்கடத்தில் 2 இடங்களில் பேருந்து நிலையம் கட்ட ரூ.21.55 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட வெளியூர்களுக்கும், மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் நிலவும் போக்குவ ரத்து நெரிசலை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மேம்பாலம் கட்டப் பட்டது. இந்த மேம்பாலத்தின் ஒருபகுதி உக்கடம் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கிறது. இதற்காக பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து நிலையத்தின் இடம் சுருங்கி, சீரற்ற நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், உக்கடம் பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கொண்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரூ.21.55 கோடி மதிப்பில் உக்கடம் பேருந்து நிலையத்தை புதுப்பித்து கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள இடம் மற்றும் செல்வபுரம் புறவழிச் சாலையில் மேம்பாலம் இறங்குதளம் அருகே காலியாக உள்ள இடம் ஆகிய இரு இடங்களில் பேருந்து நிலையம் அமைய உள்ளது.
பழைய இடத்தில் ஒரே நேரத்தில் 30 பேருந்துகள் நிற்கும் வகையிலும், புதிய இடத்தில் 28 பேருந்துகள் நிற்கும் வகையிலும் ரேக்குகள் கட்டப்பட உள்ளன. இரு இடங்களிலும் அனைத்து அடிப்படை கட்டமைப்புப் பணிகளும் செய்யப்படும். எந்தெந்த இடத்தில் எந்தெந்த வழித்தட பேருந்துகள் நிறுத்தப்படும் என்பது, கட்டுமானப் பணிக்கு பின்னர், போக்குவரத்து, வட்டாரப் போக்குவரத்து, காவல்துறை அதிகாரிகள் கலந்து பேசி இறுதி செய்யப்படும்.
தற்போது கட்டுமானப் பணியை மேற்கொள்ள ஆன்லைன் முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. டிசம்பர் 17-ம் தேதி ஒப்பந்தப் புள்ளிக்கான தேதி முடிகிறது. அதன் பின்னர், திட்டப்பணியை மேற்கொள்ளும் நிறுவனம் தேர்வு செய்யப்படும்’’ என்றனர்.
ரவுண்டானா அமைக்க முடிவு: பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து சுங்கம் புறவழிச்சாலையை கடந்து வெளியே வருகின்றன. இவ்வாறு வெளியே வரும் பேருந்துகளும், செல்வபுரம் புறவழிச் சாலை, டவுன்ஹால் மற்றும் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து மேம்பாலத்தின் கீழ்பகுதி வழியாக வந்து சுங்கம் புறவழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்களும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியே வருவது சரிவர தெரியாத சூழலால், அருகே வந்தவுடன் தங்களது வாகனத்தை நிறுத்திச் செல்கின்றனர். வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இடம் உள்ளது. எனவே, இங்கு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மேற்கண்ட இடத்தில் நிலவும் விபத்து குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வந்து சுங்கம் புறவழிச்சாலையில் இணையும் இடத்தில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுங்கம் - உக்கடம் வழித்தடம் சற்று மேடாகவும், உக்கடம் - சுங்கம் வழித்தடம் சற்று இறக்கமாகவும் உள்ளது. எனவே, குறிப்பிட்ட தூரம் வரை இந்த ஏற்ற, இறக்கத்தை சரி செய்து ரவுண்டானா அமைக்கப்படும். அதன் பி்ன்னர் வாகன ஓட்டிகள் விபத்து அச்சமின்றி செல்லலாம். இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
