

திருநெல்வேலி: நெல்லையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்று (நவ.22) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போதைய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா பேசிக் கொண்டிருந்தபோது சலசலப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்து வருவது குறித்து அவர் பேசியது மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா தரப்பு ஆதரவாளர்களுக்கும் பாப்புலர் முத்தையா தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது. இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்பி வேலுமணி அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவரது சமரசத்துக்கு பின்பு கூட்டத்தில் இயல்பு நிலை திரும்பியது.