Published : 27 Jun 2018 08:51 AM
Last Updated : 27 Jun 2018 08:51 AM

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு தோண்டத் தோண்ட கிடைக்கும் போராளிகளின் ஆயுத குவியல்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகும், தமிழ் போராளிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதக் குவியல்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் அவ்வப்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

1983-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றதை தொடர்ந்து, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின்பேரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆதரவுடன் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இலங்கை யைச் சேர்ந்த பல்வேறு தமிழ் போராளிக் குழுக்கள் ஆயுதப் பயிற்சி பெற்றனர்.

இந்திய ராணுவம் பயிற்சி

அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடுவது, கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவது, ராக்கெட்களை ஏவுவது, கையெறி குண்டுகளை வீசுவது உட்பட பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் இந்திய - இலங்கை ஒப்பந்தம் 1987-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இதன்பிறகு தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கை தமிழ் போராளிக் குழுக்கள் அனைத் தும் வெளியேற்றப்பட்டன.

தமிழகத்தில் புதைப்பு

இதனால், பயிற்சியின்போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே ஆயுதங்களை புதைத்துவிட்டுச் சென்றனர்.

முதன்முறையாக சேலத்தில்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழ் போராளிகள் புதைத்து வைத்த ஆயுதக் குவியல்கள் இந்தியா மற்றும் இலங்கையில் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக 2014-ல் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள பச்சமலை காப்புக்காட்டில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது.

வனத் துறையினர் மரக் கன்று கள் நடுவதற்காக பொக்லைன் மூலம் குழிகள் தோண்டியபோது ஓர் இடத்தில் பழைய இரும்பு பேரல் ஒன்று தென்பட்டது. அதை உடைத்துப் பார்த்தபோது, ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் 3 பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

அதற்குப் பிறகு தற்போது ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் அந்தோனியார்புரத்தில் ஆயுதக் குவியல்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன.

இலங்கைப் போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆன நிலையிலும் இலங்கையில் விடுதலைப் புலி கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து தேடி அழித்து வருகின்றனர்.

கப்பல் மூழ்கடிப்பு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்காக கே.பி. என்று அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் பயன்படுத்திய ஏ522 என்கிற ஆயுதக் கப்பலை கடந்த மார்ச் 26-ம் தேதி கைப்பற்றி இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். இக்கப்பல் பழுதடைந்தது. பின்னர் பராமரிக்க முடியாததால் இலங்கை கடற்படையின் ரங்கல முகாமில் இருந்து நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு மூழ்கடிக் கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருக்கலாம் என்று அந்நாட்டு ராணுவத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு தோண் டினர்.

முல்லைத்தீவில் குண்டுகள்

அப்போது எறிகணைகள் 34, மைக்ரோ பிஸ்டல் குண்டுகள் 3000, கை குண்டுகள் 34 , கண்ணி வெடிகள் 48 , ஆர்பிஜி குண்டுகள் 7, இஜிபிஎம்ஜி குண்டுகள் 2000, விமான எதிர்ப்பு குண்டுகள் 1710, கிளைமோர் குண்டுகள் 4 , சி.04 வகை வெடிமருந்து 48 கிலோ உள்ளிட்டவை கிடைத்தன.

இதுபோல தொடர்ந்து விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் ஆங்காங்கே கிடைத்து வரு கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x