

சென்னை: சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பிற்பகலில் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மின்சார ரயில் சேவை பகுதி ரத்து: இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே நவம்பர் 20 முதல் 23-ம் தேதி வரை பராமரிப்பு பணி நடப்பதால், பிற்பகல் 1.10 முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகளின் நலன் கருதி, சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தேவைக்கேற்ப கூடுதல் பேருந்து: தேவைக்கேற்ப அதிக பேருந்துகளும் இயக்கப்படும். இரு இடங்களிலும் அலுவலர்களை நியமித்து பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.