ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் இருவர் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு

ஈஸ்வரன், யுவராஜ்
ஈஸ்வரன், யுவராஜ்
Updated on
1 min read

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சப்போ செந்திலின் கூட்டாளிகள் இருவர், திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ என்ற சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சம்போ செந்திலின் கூட்டாளிகளான ஈசா என்கிற ஈஸ்வரன்(33), யுவராஜ் என்கிற எலி யுவராஜ்(33) ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்து, ‘நாங்கள் திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும்’ என காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு சம்போ செந்திலுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஒன்றே முக்கால் வருடம் சிறை வாசத்துக்குப் பிறகு சேலம் சிறையிலிருந்து கடந்த வாரம் வெளிவந்திருக்கிறோம்.

எங்களால் எங்களது குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டனர். எனவே திருந்தி சுயதொழில் செய்து பிழைக்க முடிவு செய்துள்ளோம். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, சேலம் சிறையில் இருந்த எங்களிடமும் போலீஸார் விசாரித்தார்கள். எங்களுக்கு சம்பந்தமில்லை என்பதால் விட்டு விட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர். பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஈஸ்வரன் மீது 5 கொலை உட்பட 23 குற்ற வழக்குகளும், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி எலி யுவராஜ் மீது 6 கொலை உட்பட 16 குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in