

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரளா கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (நவ.21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும்.
இதன் காரணமாக நவம்பர் 23-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த இரு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை: இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்தது. ஆனால் மதியத்துக்கு பிறகு மழை இல்லாமல், மேகமூட்டமாக காணப்பட்டது. மீண்டும் இரவு 11 மணி முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து இன்று மதியம் வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் தேங்கியது. தூத்துக்குடி மாநகரில் பாளையங்கோட்டை சாலை, ஜிசி சாலை போன்ற பெரும்பாலான சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதேபோன்று மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள், தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. ஆனால், பெரும்பாலான இடங்களில் மழை நின்றது தண்ணீர் வடிந்துவிட்டது. மழைநீர் வடியாத பகுதிகளில் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றப்பட்டது.
இதேபோல் திருச்செந்தூர் நகரில் ரதவீதிகள் உள்ளிட்ட சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாத்தான்குளம், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் பகுதிகளிலும் தொடர் மழையால் மக்கள் பாதிப்படைந்தனர்.
விடுமுறை: தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டார். இதனால் பெற்றோர் நிம்மதியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காசோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழை காரணமாக இந்த பயிர்கள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், தொடர் மழை காரணமாக தாமிரபரணி பாசனத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் பிசான நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் உற்சாகமாக தொடங்கியுள்ளனர்.
மழை அளவு: மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடி 27.50, ஸ்ரீவைகுண்டம் 25, திருச்செந்தூர் 45, காயல்பட்டினம் 45, குலசேகரன்பட்டினம் 39, சாத்தான்குளம் 33, கோவில்பட்டி 13, கயத்தாறு 15, கடம்பூர் 26, எட்டயபுரம் 13, விளாத்திகுளம் 28, காடல்குடி 5, வைப்பார் 39, சூரங்குடி 27, ஓட்டப்பிடாரம் 27, மணியாச்சி 2, வேடநத்தம் 12, கீழஅரசடி 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.