தென்காசி மாவட்டத்தில் இடைவிடாத மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

தென்காசி மாவட்டத்தில் இடைவிடாத மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு 
Updated on
2 min read

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய மழை பெய்த நிலையில், பகலிலும் மழை நீடித்தது.

ஒரு சில இடங்களில் அவ்வப்போது பலத்த மழையும் மற்ற பகுதிகளில் தொடர்ந்து மழை தூறிக்கொண்டும் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர் மழையால் கட்டுமான பணிகள், செங்கல் சூளை தொழில்கள் பாதிக்கப்பட்டது.

கீழப்பாவூர் பகுதியில் நெல் நடவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான வயல்களில் நெல் நடவு பணிகள் நடைபெற்றன. தொழிலாளர்கள் மழைக்கோட் அணிந்துகொண்டு பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமா தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவிட்டார்.

இருப்பினும் சில பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஆட்சியரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவசரமாக அந்த பள்ளிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று காலை வரை 24 மணி நேரத்தில் செங்கோட்டையில் 26 மி.மீ., குண்டாறு அணையில் 20 மி.மீ., ராமநதி அணையில் 12 மி.மீ., தென்காசியில் 10 மி.மீ., கருப்பாநதி அணை, சங்கரன்கோவிலில் தலா 9 மி.மீ., அடவிநயினார் அணையில் 7 மி.மீ., கடனாநதி அணையில் 5 மி.மீ., சிவகிரியில் 3 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in