ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு 

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு 
Updated on
1 min read

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மருத்துவர்களை கண்காணிப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் மு.அகிலன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் போக்குவரத்து சிரமமாக இருக்கக்கூடிய குக்கிராமங்கள் உள்ளிட்ட மருத்துவ சேவை தேவைப்படுகிற கிராமப் புறங்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சென்று பணியாற்றுகின்றனர். அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில், கேமரா அமைத்து கண்காணிக்கப் போகிறோம் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சுகாதார நல அலுவலர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், கூடுதல் இயக்குநர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் முதன்மையாக துறை இயக்குநர் என பல அடுக்கு மேற்பார்வை நிலை உயர அலுவலர்கள் பணியில் இருக்கின்றனர். அவர்களை கொண்டு நேரடியாக கண்காணிக்காமல், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கப் போகிறோம் என்பது தவறானது.

அரசு மருத்துவரை குத்துமளவுக்கு பதட்டமான சூழ்நிலையில் பாதுகாப்பு முறைகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய சூழலிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கோரப்பட்ட கண்காணிப்பு கேமராவை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை கண்காணிக்கப் பயன்படுத்துவது என்ன நியாயம். தற்போது நிலவும் ஆள் பற்றாக்குறைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது சுகாதாரத்துறையை எதிர்த்து தீவிரப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கார்த்தீஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் அகிலன், மாநில பொருளாளர் ரெங்கசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்துக்கு சென்று தற்போதைய நெருக்கடி சூழலில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த 20 கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in