

ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்கும் காட்டாங்குளத்தூர் செந்தமிழ்நகர் பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்படுமா என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கிறார்கள். சென்னை தாம்பரத்தை அடுத்த மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி காட்டாங்குளத்தூர் செந்தமிழ் நகர். பொத்தேரி - காட்டாங்குளத்தூர் இடையே ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செந்தமிழ் நகர் மற்றும் அதன் அருகேயுள்ள விஜிஎன் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழில் செய்வோர், தொழிலாளர்கள் என ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சென்னை நகர வாசிகள் பலர் அமைதியான, நெருக்கடி இல்லாத, காற்றோட்டம் மிக்க பகுதி என கருதி தொடர்ந்து இப்பகுதியில் குடியேறிய வண்ணம் உள்ளனர்.
இதனால் நாளுக்கு நாள் இப்பகுதி விரிவடைந்து கொண்டே போகிறது. அதோடு பஸ் மற்றும் ரயில் வசதி, அருகிலேயே பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் என தேவையான வசதிகள் இருப்பதால் இப்பகுதி பலரும் விரும்பக்கூடிய பகுதியாக வளர்ந்து வருகிறது.
இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் கீழ்நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். அவர்கள் ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டுமானால் ஒரு கி.மீ தொலைவில் உள்ள பொத்தேரி அல்லது கோனாதி அல்லது காட்டாங்குளத்தூரில் உள்ள ரேஷன் கடைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. முதியவர்கள் இவ்வளவு தூரம் செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய இப்பகுதியில் ரேஷன் கடை இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுதொடர்பாக செந்தமிழ் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் கே.முருகானந்தம் கூறியதாவது: இப்பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பது என்பது அத்தியாவசிய தேவை ஆகும். பெரும்பாலானோர் காட்டாங்குளத்தூர் அல்லது பொத்தேரி ரேஷன் கடைகளுக்கு சென்று தான் பொருட்களை வாங்கி வருகின்றனர். பொத்தேரி ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டுமானால் அங்குள்ள ரயில்வே கேட் மற்றும் ஜிஎஸ்டி சாலையை கடந்துதான் செல்ல வேண்டும்.
ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதாலும் வாகன போக்குவரத்து மிகுந்த ஜிஎஸ்டி சாலையை கடக்க வேண்டியிருப்பதாலும் மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் நடந்து சென்றாலும் சரி இரு சக்கர வாகனங்களில் சென்றாலும் சரி கடினமாக இருக்கிறது. செந்தமிழ்நகர், அதை ஒட்டியுள்ள விஜிஎன் நகர் பகுதியில் ஏறத்தாழ 500 ரேஷன் கார்டுகள் இருக்கும். எனவே, இப்பகுதியில் ரேஷன் கடை திறந்தால் இப்பகுதி மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.
ஒருவேளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் கார்டுகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இடையூறாக இருந்தால் குறைந்தபட்சம் பகுதிநேர ரேஷன் கடையையாவது திறக்கலாம். வாரத்தில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் திறந்தாலேபோதும். இங்கு நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளதால் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்துக்கு பஞ்சமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.