‘‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது’’ - ஆசிரியர் கொலைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் | முக ஸ்டாலின்
டிடிவி தினகரன் | முக ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: "தஞ்சாவூரில் அரசுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது?" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

அண்மையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இனியாவது விழித்து தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in