நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையுடன் அணுக வேண்டும்: நீதிபதி மனைவி முன்வைக்கும் காரணம்

நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையுடன் அணுக வேண்டும்: நீதிபதி மனைவி முன்வைக்கும் காரணம்
Updated on
1 min read

மதுரை: நடிகை கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்‌ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி சுவாமிநாதன். இவர், சக்‌ஷம் (மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு) என்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவராக உள்ளார்.

இவர் விடுத்துள்ள அறிக்கை: அவதூறு வழக்கில் கைதாகியுள்ள நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிரான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி ஆளாக அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்துகொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால்.

நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான். (Special Mother). எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். இதன் அடிப்படையில் எனக்கும் என்னைப்போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது. கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் அவரது குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

ஒரு மாற்றுத் திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன் என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in