குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நவ.27-ல் தமிழகம் வருகை

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நவ.27-ல் தமிழகம் வருகை
Updated on
1 min read

சென்னை: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார்.

அதன்படி நவ.27-ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை, சூலூர் விமானப்படை விமான தளத்துக்கு வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை வருகிறார். ராஜ்பவனில் அன்றைய தினம் ஓய்வெடுக்கிறார்.

நவ.28-ம் தேதி சாலை மார்க்கமாக குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குச் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் குடியரசு தலைவர் உரையாற்றுகிறார். இதன் பின்னர் மீண்டும் ராஜ்பவன் வந்து தங்குகிறார்.

நவ.29-ம் தேதி உதகை ராஜ்பவனில் பழங்குடியின மக்களைச் சந்திக்கிறார். 30-ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்குச் செல்லும் அவர், திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு மீண்டும் திருச்சி வந்தடைந்து, திருச்சியில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, விமானப்படை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

மேலும், நவ.23-ம் தேதி முதல் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in