

உயர் கல்வித் துறைக்கு அமைச்சராக இருந்த பொன்முடி இப்போது வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். ஆளுநருடன் இணக்கத்தைக் கடைபிடிக்கவே இந்த இலாக மாற்றம் என்று சொல்லப்படும் நிலையில், அக்டோபர் 17-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய பொன்முடி, “சட்டப் பேரவைத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
ஏன், எனக்கேகூட சீட் இல்லாமல் போகலாம்” என்றார். உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்துவதற்காக அவர் இப்படிப் பேசியதாகச் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் வேறு சில அரசியல் நகர்வுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவினர், “எதிர்காலத்தில் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தவிருக்கும் உதயநிதியின் வேகத்துக்கு சுறுசுறுப்பாக ஓடிவரக்கூடியவர்களுக்கு கட்சியிலும் தேர்தலிலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறது தலைமை.
அதற்காக இப்போதைய சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு 2026 தேர்தலில் ஓய்வு கொடுத்துவிட்டு இளையவர்களுக்கு வாய்ப்பளிக்கும் முடிவில் தலைமை இருக்கிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் பொன்முடிக்கு தலைமையின் இந்த எண்ணவோட்டம் ஓரளவுக்கு தெரிந்திருக்கும். அதன்வெளிப்பாடு தான், ‘எனக்கே சீட் இல்லாமல் போகலாம்’ என்ற அவரது பேச்சு” என்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்த உதயநிதி, “நமது அமைச்சர் பொன்முடி 35 ஆண்டுகள் கலைஞரோடு பயணித்தவர்; கலைஞரின் தம்பி. நம் தலைவரின் தளபதி, என் அரசியல் வழிகாட்டி. அவர் இல்லையென்றால் நான் கிடையாது. அவருக்கு கவுதமசிகாமணி எப்படி ஒரு பிள்ளையோ, அப்படி நானும் ஒரு பிள்ளை.
நம் தலைவர் அமைச்சர் பொன்முடியையும், கவுதமசிகாமணியையும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்கமாட்டார்” என்று பேசினார். மார்ச்சில் அவர் இப்படிப் பேசிச் சென்றார். ஜூனில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கவுதமசிகாமணி நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பொன்முடி, “25 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி நற்பணி மன்றம் துவக்கி அப்போதே உதயநிதியை அழைத்து வந்தது இந்த விழுப்புரம் நகரம்தான். அந்த உழைப்பிற்குத் தான் திமுக தலைமை இப்போது மாவட்டப் பொறுப்பாளராக கவுதமை அடையாளம் காட்டியுள்ளது” என்றார்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது அரசு நிகழ்ச்சிகளிலும் பொன்முடிக்கு நிகராக முக்கியத்துவப் படுத்தப்படுகிறார் கவுதமசிகாமணி. கட்சி சம்பந்தப்பட்ட முக்கிய பணிகளை முழுமையாக கவுதமசிகாமணியிடம் ஒப்படைத்துவிட்டார் பொன்முடி. தன்னைச் சந்திக்க வரும் நிர்வாகிகளைக்கூட, “கவுதமைப் பாருங்கள்” என திருப்பிவிடுகிறார் பொன்முடி.
இதையெல்லாம் சுட்டிக்காட்டும் விழுப்புரம் திமுகவினர், “தலைமையின் குறிப்பறிந்து, பொன்முடி 2026 தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க நினைக்கலாம். அப்படி முடிவெடுத்தால் தனது தொகுதியில் தனது மகன் கவுதமசிகாமணியை நிறுத்தி அவரை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் தான் இதெல்லாம்” என்கிறார்கள்.
இந்த நிலையில், “எனக்கே சீட் இல்லாமல் போகலாம்” என்ற பொன்முடியின் பேச்சு குறித்து கவுதமசிகாமணியிடம் கேட்டதற்கு, “கட்சியினரை உற்சாகப்படுத்தத்தான் அப்படி பேசினார். மற்றபடி அதற்கு வேறெந்த அர்த்தமும் இல்லை” என்றார்.