

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த பொது விசாரணை மன்றம் சென்னை லயோலா கல்லூரியில் சனிக்கிழமை நடந்தது. பொது விசாரணை மன்றக் குழுவின் நடுவராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கலந்துகொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதுபோல பொய்ப் பிரச்சாரம் நடக்கிறது. இச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால் திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவசர சட்டங்கள் உருவாக்கப்பட்ட 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு காலம் தாழ்த்தும் விதமாக நிலைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலப்படுத்துவது அவசியம். நீதிமன்றங்கள் இருக்கும் வரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த பொய்ப் பிரச்சாரங்கள் எடுபடாது.
தமிழக அரசு இச்சட்டம் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதிகளை அமைத்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் கரிசனம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர்.
இந்த பொது விசாரணை மன்றத்தில் எஸ்.சி/எஸ்.டி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள், காவல் துறையினரின் அணுகுமுறை போன்றவை குறித்து சாட்சியங்கள் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பொது விசாரணையின் முடிவில் உருவாக்கப்படும் அறிக்கை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசின் மேல் மட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படும்.
இவ்வாறு நீதிபதி சந்துரு கூறினார்.