நவ.30-ல் திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்

நவ.30-ல் திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்

Published on

திருவாரூர்: திருவாரூர் அருகே, நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் நவ.30ம் தேதி, நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குரயரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தரவுள்ளார்.

திருவாரூர் அருகே, நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதிலும் இருந்து 2,700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தர உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேராசிரியர்களுக்கு தெரிவித்து உறுதிப்படுத்தியதாகவும், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வரும் 23-ம் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

வரும் நவ.30-ம் தேதியன்று தனி விமானம் மூலம் கோவை வருகைதர உள்ள குடியரசுத் தலைவர், ஹெலிகாப்டர் மூலம், நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், மீண்டும் கோவைக்கு வந்து , அங்கிருந்து ஹெலிஹாப்டரில் புறப்பட்டு நேரடியாக, திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்கு வருகை தருகிறார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்ல உள்ளதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in