முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் நவ. 19-ல் தீர்ப்பு : ஐகோர்ட்டில் தகவல்

முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் நவ. 19-ல் தீர்ப்பு : ஐகோர்ட்டில் தகவல்
Updated on
1 min read

மதுரை: சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் நவ.19ல் தீர்ப்பு அளிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் தலித் ஏழுமலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ். இவர் சமீபத்தில் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர். இந்நிலையில் சென்னை ஒட்டேரியில் அடுக்குமாடி குடியுருப்பில் வைத்து கடந்த 2014ல் காமராஜ் படுகொலை செய்பட்டார்.இக்கொலை தொடர்பாக சென்னை கொரட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உத்திரவட்டது.

மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கக்கோரி 2021-ம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள கொலை வழக்கை விரைவில் முடிக்க கோரி கொல்லப்பட்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கே கே ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், விசாரணையை முடிக்க இருமுறை கால அவகாசம் வழங்கியும் விசாரணை முடியவில்லை எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதி, இந்த வழக்கை இவ்வளவு நாள் காலதாமதம் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் இந்த வழக்கு விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. நவ. 19-ல் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, இனியும் கால தாமதம் செய்ய வேண்டாம். உரிய நேரத்தில் வழக்கை முடியுங்கள் என அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in