மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் திரையரங்க வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்கள். தற்போது திரையரங்கில் இரு நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசுவது போன்ற சி சி டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் தமிழக முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in