அரசு ஊழியர்களுக்கு கட்டப்படும் வீடுகளில் பொது ஒதுக்கீட்டை ரத்து செய்ய தலைமைச் செயலக சங்கம் வேண்டுகோள்

கோப்புப் படம் |  ஜோதி ராமலிங்கம்
கோப்புப் படம் | ஜோதி ராமலிங்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்படும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பொது ஒதுக்கீட்டில் வழங்குவதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமைச் செயலக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அச்சங்க தலைவர் கு.வெங்கடேசன், பொருளாளர் பிரபா ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் வீட்டுவசதி வாரியம் மூலம், புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த மார்ச் 8-ம் தேதி தங்களால் திறக்கப்பட்டது. வீட்டுவசதி வாரியத்தால் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகள் கட்டப்படும் போது, ஏற்கெனவே அந்த குடியிருப்புகளுக்கு பதிவு செய்த பணியாளர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையில் ஒதுக்கப்படும். இந்த நடைமுறை தெடார்ந்து பின்பற்றப்படுகிறது. அத்துடன், தலைமைச்செயலக பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு குறித்த கோரிக்கையும் நெடுங்காலமாக உள்ளது.

கடந்த முறை இது போன்று புதிதாக கட்டப்பட்ட வாரிய அரசு அலுவலர் குடியிருப்புகள், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொண்டோம். மேலும், பொது ஒதுக்கீடு என்ற பெயரில், ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சிகளின் அரசியல் பிரமுகர்களுக்கு வீடு ஒதுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பொது ஒதுக்கீட்டின்படி வாடகை குடியிருப்பு பெறுவோர், அக்குடியிருப்பை தங்கள் சொந்த குடியிருப்பாக பாவித்து, கலம்காலமாக வீட்டை காலி செய்யாமல் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு பணியாள்ரகள் சங்கம் ஒன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பொது ஒதுக்கீட்டில் அரசுப்பணியாளர்கள் அல்லாதவர்களுக்கு வீடு ஒதுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஆனால், இவற்றை புறந்தள்ளிவிட்டு, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் வாரியத்தால் கட்டப்பட்ட அரசு பணியாளர்கள் வாடகைக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல்வரால் திறக்கப்பட்ட குடியிருப்பு 8 மாதங்களாக ஒதுக்கப்படாமல் உள்ளது. பொது ஒதுக்கட்டில் வீடு ஒதுக்குவதற்காகவே காலம் தாழ்த்தப்படுவதாக கருத வேண்டியுள்ளது.

எனவே, அரசுப் பணியாளர்களுக்கு கட்டப்பட்ட, கட்டப்படும் வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஏராளமானவர்கள் காத்திருப்பதால், பொது ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள குடியிருப்பில் 25 சதவீதம் தலைமைச்செயலக பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in