

நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு என்பது ஒரு திடீர் முடிவு அல்ல. பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு, திரைக்கு உள்ளே, வெளியே என மிகக் கவனமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. பொழுதுபோக்கின் முகமூடியில் அமைந்த ஒரு நுட்பமான அரசியல் கருவியாக அமைந்தது அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம். இப்படத்துக்குப் பின் இளைய தளபதியாக இருந்த விஜய் ‘தளபதி’ என மகுடம் சூடினார்.
‘மெர்சல்’ படத்தின் பாடல்களும், காட்சிகளும் அமைந்தது தற்காலிகம் போல் தெரியவில்லை. ‘ஆளப்போறான் தமிழன்’ எனும் பாடல் ஒரு போர்க்கொடியை உயர்த்தியது. இது, தமிழக சமூக அரசியல் போர்க்களத்தில் காலடி வைக்கும் ஒரு தலைவனின் ‘முதல் கர்ஜனை’ போலவும் அமைந்தது. மத்திய அரசின் கொள்கைகளை நேரடியாக விமர்சிக்கும் விஜய், தன் கதாபாத்திரங்களை வெவ்வேறு சமூகச் சூழலில் பொறுத்திக்கொண்டார்.
இதே படத்தில் எம்ஜிஆர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் குறியீடுகள் இடம்பெற்றன. இதுபோல், தனது அரசியல் பார்வைகளை திரையில் விஜய் காட்டியது, அவரது பயணத்தில் ஒரு திருப்புமுனை. எம்ஜிஆரின் குறியீடுகளை தனது கதைகளில் இணைத்ததோடு நிற்காமல், அவரை போன்ற தலைமை பாணியையும் திரையில் தனதாக்கினார் விஜய்.
இவரது கொள்கைப் பயணமும் தொடர் பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு தன் நிலைப்பாடுகளில் மாற்றங்களை செய்து வந்துள்ளார் விஜய். இருப்பினும், தன் அடிப்படை கோட்பாடுகளை தொடக்கம் முதலே உழைக்கும் வர்க்கத்தில் ஒருவனான கதாப்பாத்திரங்களாக அமைத்து வந்துள்ளார்.
தமிழ்ப் பெருமை, சுயமரியாதை மற்றும் சமூக நீதி ஆகிய மதிப்புகளை மீறிய கதையோட்டங்களில் விஜய் தன்னை பொறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் பழமைவாதக் கருத்துக்களைப் பிரதிபலித்தவராக இருந்தாலும், முற்போக்கான சிந்தனைகளை உருவகப்படுத்தும் ஒரு நபராக தன்னை மாற்றியமைத்துக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
தனது அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக, விஜய் தன் ஒவ்வொரு மேடையையும் பொதுமக்களுடன் உரையாடுவதற்காக பயன்படுத்தினார். திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் நடுவிலான இடைவெளியை நிரப்பும் பாலத்தை கட்டியெழுப்பினார்.
இசை வெளியீடுகளின்போது நிகழ்த்தப்பட்ட அவரது ‘குட்டிக் கதை’ பேச்சுகள், வெறும் ரசிகர் தொடர்புகளாக நின்றுவிடவில்லை. மாறாக, சாதாரண மக்களின் அன்றாடப் போராட்டங்களுடன் ஒத்துப்போகும் சுருக்கமான கருத்துரையாடலாக அமைந்தன. சராசரி மேடைப்பேச்சுகளினால் சோர்வடைந்திருந்த தமிழக மக்களுக்கு, விஜய்யின் பேச்சுகள் முலாம் பூசிய அரசியல் சொற்பொழிவாக இருக்கவில்லை. புதிய தலைமுறையிடம் நேரடியாக உரையாடும் புத்துணர்ச்சியை ஊட்டும் ஒன்றாக அமைந்தது.
மேடைகளில் விஜய்யின் குட்டி கதைகள் ஒவ்வொன்றும் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தன. ஆதலால் அவரது முதல் அரசியல் மேடை பேச்சுக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அவரது அறிமுக உரையானது விமர்சகர்களை மவுனமாக்கி, ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியது. விஜய் அளித்த பேச்சு, துல்லியம் மற்றும் தெளிவு நிறைந்த ஒன்றாகவே அரசியல் விமர்சகர்கள் விவரிக்கின்றனர்.
அரசியல் களத்தில் தனது முத்திரையை பதிக்கும் விதமாக தனது விஜய் வருகையை தாரைத்தப்பட்டை முழங்க அறிவித்தார் விஜய். 1960-களில் தமிழ்நாடு கண்ட ஓர் இளம் பட்டாளத்தின் அணிவகுப்பை போன்று ஒரு தருணத்தை எதிர்நோக்குகிறது இன்றைய அரசியல் களம்.
சமீப ஆண்டுகளாக பற்பல கொள்கை புள்ளிகளில் இருந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் உதயநிதி, சீமான், அண்ணாமலை போன்ற இளம் தலைமைகள் உருவாகின்றனர். இச்சூழலில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, தமிழக அரசியல் களத்தை ஒரு புதிய பாய்ச்சலை நோக்கி பயணப்பட வைக்கும்.
ஏற்கெனவே, இளைஞர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கை பெற முடியாத நிலையில் தவிக்கிறது அதிமுக. இக்கட்சிக்கு, எரியும் தீயில் ஊற்றப்படும் எரிபொருளாகவே விஜய் கட்சி விளங்கக் கூடும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, விஜய் பேச்சு மேடையில் ஒலித்தது. அதிமுகவுக்கு தனது பேச்சில் ஒரு துணுக்களவும் அவர் இடம் அளிக்கவில்லை.
தனது கொள்கைக் கூறுகள் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துள்ளார் விஜய். தனது முதல் அரசியல் உரையில் திமுக, பாஜக போன்றோரையும் அரசியல் எதிரிகளாக முன்னிறுத்தினார் விஜய். ஆட்சியில் பங்கு எனும் அவரது அரைகூவலின் மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இக்கருத்தின் மூலம் விஜய் எடுத்திருக்கும் முயற்சி என்பது ஒரு தேர்ந்த அரசியல் சூத்திரதாரிக்கான பண்புகளை பிரதிபலிக்கிறது.
மேலும், விஜய்யை பொறுத்தவரையில் திமுகவுக்கு நேரெதிர் சக்தியாகவும், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக தன்னை முன்னிறுத்த விரும்புகிறார். மாநாட்டு மேடையின் காணொலி தனது அடுத்த மற்றும் கடைசி திரைப்படத்தின் முன்னோட்டத்தை ஒட்டிய அம்சங்களையும், சாயல்களையும் கொண்டிருந்தன. 2025-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘விஜய் 69’ திரைப்படம் வினோத் இயக்கத்தில் வெளிவரப்போகும் ஓர் அரசியல் பிரச்சார பீரங்கியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம், கூர் தீட்டப்பட்ட அரசியல் படமாக அமையும் பட்சத்தில், 2026 தேர்தல் களமானது மேலும் சூடுபிடிக்கும்.
அரசியலில் கால் பதித்திருக்கும் விஜய் வருகையால் தமிழகத்தில் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள அரசியல் சூழலில் பெரும் தாக்கம் ஏற்படும். வட தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்கள் மத்தியில் பாமக, விசிக முக்கிய இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளின் பாரம்பரிய வாக்காளர்களான வன்னியர் மற்றும் பட்டியலின மத்தியில் விஜய் தாக்கத்தை உண்டாக்குவார். இதன் பின்னணியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற கவர்ச்சிமிகு தலைமைகளில் அரசியல் வரலாறு உள்ளது. இவர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் இடையே செல்வாக்கை பெற்றிருந்தனர்.
சீமானும் தன் நாம் தமிழர் கட்சிக்காக, அரசியல் கலாச்சாரத்துக்கு எதிரான ஓர் இளைஞர் படையை திரட்டியிருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் இவரது வாக்கு எண்ணிக்கையானது கூடுகிறது. இச்சூழலில், விஜய் வருகை என்பது சீமான் கட்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதன் நீட்சியாகவே சீமான் அவரது அதிருப்தியை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி உள்ளார். தமிழக இளைஞர்கள் மத்தியில் விஜய்யின் வரவேற்பின் குறியீடாக இதைப் பார்க்கலாம். தனது அரசியல் வளர்ச்சிக்கு தடையாக அமையக் கூடிய விஜய்யின் வருகையானது சீமானுக்கு சவாலாகவே அமையும். இதை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதனால் மட்டுமே விஜய் தனக்கான நிலையான இடத்தை பிடித்துவிடவில்லை. இதன் உற்சாகத்தை தக்கவைத்துக்கொள்ள தனது அரசியலை தெருவுக்குத் தெரு எடுத்துச்செல்ல கூடிய ஒரு கட்டமைப்பை எழுப்ப வேண்டும். இன்றைய சூழலில் விஜய் மற்றும் ஆனந்தை தவிர்த்து சொல்லத்தக்க பெயர்கள் தவெக-வில் இல்லை என்பதே கசப்பான உண்மை. கட்சி துவங்கியது முதல் பேசுபொருளாக உருவெடுத்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இவர்கள் பெற்றிருக்கும் வரவேற்பை வாக்குகளாக மாற்றுவதற்கு பல யுத்திகளை கையாள வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களை கண்டறிந்து, அவர்களை தயார்படுத்த வேண்டும். வேட்பாளர்களை இனம் கண்டு, அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, தொகுதிவாரியாக செயல்திட்டங்களை அணிவகுத்து, தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக பலர் இதைக் கட்டமைப்பதில் தோல்வி அடைந்துள்ளனர்.
இன்றையச் சூழலில் சமூக வலைதளங்களில் களமாடுவது இன்றியமையாததுதான் என்றாலும், திமுக மற்றும் அதிமுகவின் கள அரசியல் வலிமையை எதிர்கொள்ளதக்க ஒரு தேர்ந்த படையை கட்டியெழுப்புதலே தவெகவின் தலையாய பணியாக இருக்க முடியும்.
ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்கள் எவ்வளவு முயன்றும் கைவராத நேர்த்தியை விஜய்யிடம் காண முடிகிறது. இது, இதர ‘மாற்று அரசியல்’ பேசியவர்களிடம் இருந்து அவரை தனித்துக் காட்டுகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசத்தையொட்டி, தமிழகத்தில் அரசியல் ஒரு புதிய யுகத்தின் விளிம்பில் நிற்கிறது.
எனவே, தன் மீதானக் கவனத்தை விஜய் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகள் வரையிலான தனது தொடர்புகளை விரிவுப்படுத்தி, நிலையான, வலிமையான, ஆழமான ஓர் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். இதன் தாக்கமாக, ஆளும் திமுக மட்டுமின்றி இந்திய அரசியலில் திரைப்பட நட்சத்திரங்களின் பங்களிப்பும் மறுவரையறை செய்யப்படக்கூடும்.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை மறுவடிவமைப்பதிலும் விஜய்யின் அரசியல் பயணம் முக்கியமான ஒன்றாகிவிடும். வரும் ஆண்டுகள் அவரது சகிப்புத்தன்மைக்கும் தகவமைப்புத்திறனுக்கும் சோதனைக் காலங்கள். விஜய்யின் வருகையால், தமிழக அரசியல் ஒருபோதும் முன்பு போல இருக்காது என்பது மட்டும் தெளிவாகிறது.
- பி.எஸ்.கெளதம், தேர்தல் வியூக ஆர்வலர்