‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட டாஸ்மாக்கும், போதை பழக்கமுமே காரணம்’ - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Updated on
2 min read

அரூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட டாஸ்மாக்கும், போதை பழக்கமுமே காரணம் என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தின் மிகப்பெரிய பிரச்சனையான காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களின் முழுமையான உணர்வாலும் ஒத்துழைப்போடு நடந்து வருகின்றன.

திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆட்சியில் உறுதியளித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் இந்த திட்டம் நிறைவேறாமல் உள்ளது. மக்களின் வாழ்வாதார குடிநீர் பிரச்சினை போக்க, காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்து ஏரிகளின் நிரப்ப வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை. இதற்காக பல்வேறு போராட்டங்களின் மூலம் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும், அதனை புரிந்து கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் உள்ளார். காவிரி, தென்பெண்ணை என இரண்டு ஆறு இம்மாவட்டத்தில் இருந்தும் ஒரு பயனுமில்லை என்பது வேதனையாக உள்ளது.

ஒரே நாளில் காவிரியில் 18 டிஎம்சி நீர் வீணாக கடலில் சென்று கலந்த நிலையில், இத்திட்டத்திற்கு தேவை வெறும் 2 டி எம் சி மட்டுமே.இதனால் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் ,பொருளாதாரமும் ,விவசாயமும் பெருகும். மாவட்டத்தில் 80 சதவீதம் பிரச்சனைகள் இந்த ஒரே திட்டத்தின் மூலம் தீர்க்கப்படும் என்ற நிலையில் அதற்காக தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்பகுதியில் பொதியம்பள்ளம் அணைக்கட்டு திட்டம், ஆனை மடுவு திட்டம், வாணியாறு உபரி நீர், தொப்பையாறு உபரி நீர் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும். மக்களின் பிரச்சனைகள் பெரிது என்றாலும் அதற்கான தீர்வுகள் சிறியதுதான்.

இங்கு நிலமுள்ளவர்களும் ,வெளி மாவட்டத்தில் கூலியாக வேலை செய்து வரும் அவல நிலை நீடித்து வருகிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மருத்துவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் 6 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளது. அதற்கு டாஸ்மாக் மற்றும் போதை பழக்கவழக்கங்கள் அதிகமாக உள்ளதே காரணமாக உள்ளது. அமெரிக்காவில் ப்ளோரிடா போன்ற மாநிலங்களில் உள்ளதை போல அனைத்து போதை பொருட்களும் தற்போது தமிழகத்தில் கிடைக்கின்றது என்பது வேதனையாக உள்ளது.

தமிழ்நாட்டில் 20 வயதுடைய இளைஞர்கள் யாரும் மது பழக்கம் இன்றி இருக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதுதான் நிர்வாகமா?, வளர்ச்சியா? திராவிட மாடலா? என்பதை விளக்க வேண்டும் . சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிஹார், ஆந்திரா, தெலங்கானா , ஒடிசா, ஜார்கண்ட் ,போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுக்க நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் நடத்திட மட்டும் மோடியை கேட்க வேண்டும் என்கிறார்.வெள்ளச்சேதம் என்றாலும் மோடியை கேட்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in