

இளைஞர்களுக்கு பதவி கொடுத் தது யார் என்பது தொடர்பாக பேரவையில் அமைச்சர்களுடன் தேமுதிக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம் வருமாறு:
தினகரன் (தேமுதிக):
என்னைப் போன்ற இளைஞர்களை உருவாக்கி, எம்எல்ஏ பதவி கொடுத்து அழகு பார்க்கும் எங்கள் தலைவர் கேப்டனுக்கு நன்றி.
அமைச்சர் பா.வளர்மதி
(குறுக்கிட்டு): உலகில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் செய்யாத அளவுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறையை உருவாக்கி 35 லட்சம் பேரைச் சேர்ந்துள்ள எங்கள் கட்சித் தலைவி, இளைஞர்களை எம்.எல்.ஏ.வாக, அமைச்சர்களாக, எம்.பி.க்களாக ஆக்கி அழகு பார்க்கிறார். இளைஞர்கள், இளம் பெண்களுக்கு உரிய மரியாதை தருபவர் எங்கள் தலைவிதான்.
சந்திரகுமார் (தேமுதிக):
2005-ம் ஆண்டு எங்கள் தலைவர் தேமுதிகவை உருவாக்கி பிறகுதானே, உங்கள் தலைவி இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறையை உருவாக்கினார்.
அமைச்சர் வளர்மதி:
எங்கள் கட்சியில் அதற்கு முன்பே இளைஞர் அணி உருவாக்கப்பட்டுவிட்டது. எங்கள் தலைவியைப் பார்த்துத் தானே நீங்கள் கட்சி தொடங்கி பிழைக்கப் பார்த்தீர்கள்.
அமைச்சர் நத்தம் விசுவநாதன்:
சந்திரகுமார் இதற்கு முன்பு அதிமுகவில் இருந்தார். வார்டு செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் தேமுதிகவுக்குப் போனார். அவர் அதிமுகவில் இருந்தபோதே கட்சியில் இளைஞர் அணி இருந்தது.
சந்திரகுமார்:
நான் 1981-ல் அதிமுகவில் இருந்தாலும் விஜயகாந்த் நற்பணி மன்றத்தில் தீவிரமாகப் பணியாற்றினேன். அதனால்தான் எங்கள் தலைவர் எனக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறார். எனது பெயரே விஜயகாந்த் சொக்கலிங்கம் சந்திரகுமார்தான்.
அமைச்சர் வளர்மதி:
எந்தெந்த கட்சியில் இருந்தார் என்று உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார். அப்போதே இவர் துரோகம் செய்து பழக்கப்பட்டுவிட்டார். நன்றி மறந்த தலைவர் போலவே தொண்டரும் இருக்கிறார்.
(தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
சந்திரகுமார்:
எந்த இடத்திலும் துரோகம் செய்து எங்களுக்குப் பழக்கம் கிடையாது.
அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம்:
இருவர் பேசியதும் அவைக் குறிப்பில் பதிவாகியுள்ளது. மானியக் கோரிக்கை மீது உறுப்பினர் தொடர்ந்து பேசலாம்.
பேரவைத் தலைவர் தனபால்:
இந்த விவகாரத்தில், இதற்குமேல் விளக்கம் சொல்லத் தேவை யில்லை.