“தாக்குதல் சம்பவங்களால் மருத்துவர்களிடம் அச்ச உணர்வு” - அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப் படம்
அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடப்பது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி, விரைந்து நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஏற்கெனவே பல முறை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் - ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின்போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி இருக்கிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் மீது திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதல்வர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். | வாசிக்க > மருத்துவர் மீது தாக்குதலால் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in