சூரியனார்கோவில் ஆதீன பிரச்சினை: 18 மடாதிபதிகள் கூடிப் பேசி முடிவெடுக்க வலியுறுத்தல்

திருவடிக்குடில் சுவாமிகள்
திருவடிக்குடில் சுவாமிகள்
Updated on
1 min read

கும்பகோணம்: சூரியனார்கோவில் ஆதீன பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் உள்ள 18 ஆதீன மடாதிபதிகள் கூடிப் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக திருவடிக்குடில் சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சூரியனார்கோவில் ஆதீனம் பிரச்சனை போல் வேறு எந்த ஆதீனத்திலும் நடந்து விடக் கூடாது. மேலும், ஆதீன நிர்வாகத்தை, அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் மற்ற ஆதீனங்களின் நிலை கேள்வி குறியாகும்.

எனவே, இது போன்ற நிலை இனி வருங்காலங்களில் ஏற்படாதவாறு, தமிழகத்தில் உள்ள 18 ஆதீன மடாதிபதிகள் ஒன்று அமர்ந்து கூடிப் பேசி, ஒருமித்த கருத்துகளைக் கொண்டு சுமூகமான நல்ல முடிவெடுக்க வேண்டும். இந்து சமயத்திற்கு பணியாற்ற ஏராளமானோர் இருக்கும் பட்சத்தில், தலைமை பீடத்தில் இருப்பவர்கள் மிகக் கவனமாக இருந்து செயல் படவேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆலயப் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் ராம.நிரஞ்சன் கூறியது: ''சூரியனார்கோவில் மடத்தின் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் திருமணம் செய்ததால், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மடத்தினை பூட்டினர். பின்னர், சுவாமிகள் ஆதீன நிர்வாகத்தை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து விட்டார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது. மேலும், ஒரு ஆதீனம், தவறு செய்யும் பட்சத்தில் மற்ற ஆதீனங்கள் ஒன்று கூடி முடிவு செய்ய வேண்டுமே தவிர, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வழங்கக் கூடாது.

சூரியனார் கோவில் ஆதீனம் என்பது மிகவும் பழமையான தொன்மையான ஆதீன மடமாகும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடாதிபதிகள் ஒன்று கூடி, இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, சூரியனார்கோவில் ஆதீனம் மடம் மற்றும் அதன் சொத்துக்களை திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின்னர், அந்த ஆதீனத்திற்குப் புதிதாக ஒரு ஆதீனத்தை நியமனம் செய்து இந்த மடத்தை வளர்ச்சி அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in