

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் வி.கே.புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயில்கின்றனர். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்காக, நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்காக நடிகர் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படம் திரையிடப்பட்டது.
இதற்காக விஜய் படத்துக்கு தலா ரூ.25, ரஜினி படத்துக்கு தலா ரூ.10 வீதம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், பெற்றோர் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்து முன்னணியினர் பள்ளி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர்.
மேலும், புதிய படங்களை திரையிட உரிமம் பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியதுடன், மாணவிகளிடம் கட்டணம் வசூலித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் உத்தரவின்பேரில், கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் கூறும்போது, ‘‘மாணவிகளுக்கு மனதளவிலான அழுத்தத்தைத் குறைப்பதற்காக படங்கள் திரையிடப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியை தெரிவித்தார். மாணவிகளிடம் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பிக் கொடுக்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.